குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்திற்கு முக்கியத்துவம் வேண்டும்!
வியாழன், 3 ஜூலை 2008 (15:35 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு காட்டும அக்கறையை குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு காட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'மக்கள் ஜனநாயகம்' இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், அணு சக்தி உடன்பாட்டை செயல்படுத்த அரசு முயற்சிக்குமானால் தங்களின் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
"குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் இல்லாத இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முயற்சிக்கும் அதேநேரத்தில், மக்களுக்கான குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தைப் பற்றி யோசிக்கவும், அதைச் செயல்படுத்தவும் மத்திய ஐ.மு.கூ. அரசிற்கு இதுவே உகந்த நேரமாகும்" என்று அந்தத் தலையங்கம் கூறுகிறது.
குறைந்தபட்சப் பொதுச்செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் இடதுசாரிகள் தாங்கள் வெளியிலிருந்து அரசுக்கு அளித்துவரும் ஆதரவை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை அரசிற்கு நினைவுபடுத்தியுள்ள அந்தத் தலையங்கம், "குறைந்தபட்சப் பொதுச்செயல் திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் இடதுசாரிகளின் ஆதரவு நீடிக்க வாய்ப்பில்லை" என்று எச்சரித்துள்ளது.
குறைந்தபட்சப் பொதுச்செயல் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல இன்னும் காகித வடிவிலேயே உள்ளன என்றும், சில திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது என்றால் அதற்கு இடதுசாரிகளின் அழுத்தம்தான் காரணம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் வளரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றும், இதைத்தடுத்து மத்தியில் மதசார்பற்ற அரசை நீட்டிக்கச் செய்வது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. கைகளில்தான் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.