காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் சோனியா தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு சோனியா காந்தி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர்கள், மாநில கட்சித்தலைவர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளுக்கு தயாராக வேண்டும் என்றும், அனைத்து மட்டத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 5 சட்ட மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றிற்கு கட்சியை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "இந்தக் கூட்டம் தேர்தல்களுக்கான தயாரிப்புகளைப் பற்றியது. இதில் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, தேர்தல் திட்டங்களை உருவாக்கி அடுத்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்" என்று கூறினார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இடதுசாரிகளுடன் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் ஏற்கனவே இதற்கு முன் நடைபெற்ற இரண்டு செயற்குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது என்றும், ஒப்பந்தம் குறித்து கட்சி மட்டத்தில் மேலும் விவாதங்கள் தேவையில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியை அனைத்து மட்டங்களிலும் பலப்படுத்துவது பற்றிய கால அட்டவணையையும் வழங்கியதாக, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் வீரப்ப மொய்லி கூறினார்.