புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலமளிக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீரில் போராட்டம் வெடித்ததையடுத்து கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஹூரியத் மாநாட்டு அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற போட்டி ஹூரியாத் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இம்மாதம் 23-ம் தேதி முதல் கிலானி அவரது ஹைதர்போரா இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அயாஸ் அக்பர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் வனபகுதி நிலத்தை அமர்நாத் கோயிலுக்கு அளித்துள்ளதையடுத்து காஷ்மீரில் ஏற்பட்ட ஆர்பாட்டங்கள் காரணமாக கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
வன நிலப்பகுதியை அமர்நாத் கோயிலுக்கு அளித்த அரசின் முடிவை எதிர்த்து மக்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவேண்டும் என்று கிலானி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த 5 நாட்களாக கடையடைப்பு நடைபெற்று வருவதால் அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உணவு மட்டும் இருப்பிடம் தந்து உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.