யுரேனியம் எரிபொருளைப் பெற அணு சக்தி ஒப்பந்தம் தேவை: அப்துல் கலாம்!
வியாழன், 26 ஜூன் 2008 (15:50 IST)
நமது நாட்டின் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை கருத்தில் கொண்டு நமது அணு மின் சக்தி உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தொடர்ந்து கிட்டிட இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியமானது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபாரட்டரீஸ் அமைப்பின் பொன் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் சர்வதேச மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசிய டாக்டர் அப்துல் கலாம்,நமது நாட்டில் மிக அதிகமாகக் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு அணு மின் சக்தியை உருவாக்கும் அணு உலைகள் தயாராகும் வரை, நமது அணு மின் உலைகளுக்குத் தேவைப்படும் யுரேனியம் எரிபொருள் தடையின்றி கிடைக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறினார்.
அனல் மின் தயாரிப்பு நிலையங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பிரச்சனைகளைத் தவிர்க்க நீர் மின் சக்தி, சூரிய சக்தி, அணு சக்தி, உயிரி மின் சக்தி ஆகியவற்றை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய கலாம், எதிர்காலத்தில் அணு உலைகளை இயக்க சந்திரனில் மிக அதிகமாக்க் கிடைக்கும் ஹீலியத்தை நாட வேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.
இந்த அடிப்படையில்தான் இஸ்ரோ சந்திரனுக்கு அனுப்பவுள்ள சந்திராயன் விண் கலம் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கலாம் பேசினார்.