பீகார் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் குறைந்தது இரண்டு நாளுக்கு ஒரு சிறைக்கைதி மரணமடைவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, 2007-ம் ஆண்டில் மட்டும் மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் 180 கைதிகள் மரணமடைந்துள்ளனர். இரண்டு நாளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் சிறைக்கைதிகள் மரணம் நிகழ்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
2005-ஆம் ஆண்டு 205 சிறைக்கைதிகளும், 2006-ஆம் ஆண்டு 175 கைதிகளும், 2007-ல் 180 கைதிகளும் மரணமடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 56 கைதிகள் மரணமடைந்துள்ளதாக சிறைச்சாலைப் பிரிவு ஐ.ஜி. சந்தீப் பாண்ட்ரிக் கூறுகிறார்.
ஆனால் இந்த மரணங்களுக்கு சிறை அதிகாரிகள் கையாளும் 3-ம் தர நடவடிக்கைகள் காரணமல்ல என்று கூறும் பாண்ட்ரிக், போதிய மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு வசதியின்மைகளே காரணம் என்றும், வயதான கைதிகளே அதிகம் மரணமடைவதாகவும் கூறுகிறார்.
அதாவது மாநிலத்தில் உள்ள 54 சிறைச்சாலைகளில் 44,000த்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுமார் 24,000 கைதிகளை மட்டுமே அந்த சிறைச்சாலைகளில் அடைக்க முடியும். இதில் 1400 கைதிகள் 70-வயதைக் கடந்தவர்கள் என்று கூறும் பாண்ட்ரிக், இவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் இல்லை என்று கூறுகிறார்.
மேலும் மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று கூறும் சிறைச்சாலை ஐ.ஜி. பாண்ட்ரிக், 65 மருத்துவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வெறும் 45 மருத்துவர்களே உள்ளனர் என்றும் பல சிறைகளில் மருத்துவ வசதியின்மையே இந்த மரணங்களுக்கு காரணம் என்கிறார்.