அமர்நாத்திற்கு மேலும் 2,883 யாத்ரிகர்கள் புறப்பட்டனர்!
திங்கள், 23 ஜூன் 2008 (15:52 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று மேலும் 2,883 யாத்ரிகர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 178 சாதுக்கள் உள்பட இந்த 2,883 யாத்ரிகர்களும் 112 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
ஆறாவது குழுவாகப் புறப்பட்டுச் சென்றுள்ள இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 17,636 யாத்ரிகர்கள் புனித அமர்நாத் சென்றுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.
இரண்டு யாத்ரிகர்கள் பலி!
அமர்நாத் குகைக்கோயிலிற்குப் புனித யாத்திரை சென்ற இரண்டு பெண் பக்தர்கள் இறந்தனர். இவர்களுடன், இந்த ஆண்டு இதுவரை இறந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
அலகாபாத்தை சேர்ந்த கமலா தேவி(70) என்ற முதியவர் பஹல்காம் சாலையில் உள்ள பஞ்சதர்ணி என்ற இடத்தில், நெஞ்சு வலியால் இறந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த கெளசல்யா செளரசியா (51) என்ற பெண்ணும் பல்டால் முகாமில், மாரடைப்பினால் இறந்தார்.