அமர்நாத்திற்கு மேலும் 2,810 யாத்ரிகர்கள் புறப்பட்டனர்!
ஞாயிறு, 22 ஜூன் 2008 (15:25 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று காலை மேலும் 2,810 யாத்ரிகர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவிலுள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 107 சாதுக்கள் உட்பட இந்த 2,810 யாத்ரிகர்களும் 55 பேருந்துகள் உள்ளிட்ட 99 வாகனங்களில் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கி புறப்பட்டனர்.
ஐந்தாவது குழுவாக புறப்பட்டுச் சென்றுள்ள இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 14,753 யாத்ரிகர்கள் புனித அமர்நாத் சென்றுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.
ஜம்முவிலிருந்து அமர்நாத் வரை 97 முகாம்களை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மத்திய கூடுதல் காவற்படை.
அமர்நாத் செல்ல இந்த ஆண்டு 2,15,007 யாத்ரிகர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.