எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்!
ஞாயிறு, 22 ஜூன் 2008 (14:42 IST)
உலகளவில் தற்போதுள்ள பணவீக்கம் சகிக்க முடியாதது என்பதால், விலைவாசியைக் கட்டுப்படுத்த வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்காணும் பொருட்டு ஜெட்டாவில் இன்று சவுதி அரேபியா அதிகாரிகளைச் சந்தித்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள விலை நிலவரங்களின் கீழ் எங்களால் இயங்க முடியாது. எண்ணெய்ச் சந்தைகளில் பற்றாக்குறையை எண்ணெய் உற்பத்தி நாடுகள் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்" என்றார்.
பின்னர் இதுகுறித்து என்.டி.டி.வி. நிறுவனத்திடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், "வினியோகத்தை அதிகரிப்பது ஒரு பிரச்சனை அல்ல" என்று சவுதி அதிகாரிகள் உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தரப்பில் பேசிய அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் அலி- அல் நைமி, "நாங்கள் ஏற்கெனவே எங்கள் வினியோகத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளோம்" என்றார்.
நமது நாட்டின் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.05 விழுக்காடாக அதிகரித்ததை அடுத்து, உலகளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி விவாதிப்பதற்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் நேற்றிரவு சவுதி அரேபியா சென்றுள்ளனர்.