ராஜஸ்தானில் குஜ்ஜார்களுக்கு 5% சிறப்பு ஒதுக்கீடு!
புதன், 18 ஜூன் 2008 (20:21 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவருக்கு சிறப்பு வகையின் கீழ் 5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதென்று அம்மாநில அரசிற்கும் குஜ்ஜார் இனத் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனால், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன.
ஜெய்ப்பூரில் இன்று குஜ்ஜார் இனத் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, குஜ்ஜார்களுடன் ரெபாரிஸ், பஞ்சாராஸ் ஆகிய இனத்தவருக்கும் 5 விழுக்காடு ஒதுக்கீடு சிறப்பு வகையின் கீழ் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த ஒதுக்கீட்டினால் மாநிலத்தில் தற்போதுள்ள ஒதுக்கீடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த அவர், சில பிரிவினருக்கு சிறப்பு ஆதரவு தர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குஜ்ஜார்களின் போராட்டங்கள் முடிவிற்கு வந்ததற்கு காரணமான எல்லா பலன்களும் வசுந்தரா ராஜேவையே சேரும் என்று பாராட்டிய பைன்ஸ்லா, தான் பாரத்பூர் சென்றவுடன் போராட்டங்கள் கைவிடப்படும் என்றார்.
இந்த விவகாரத்தில் இனியும் தாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்காது என்று நம்புவதாகவும் பைன்ஸ்லா குறிப்பிட்டார்.
முன்னதாக, குஜ்ஜார்களின் போராட்டத்தில் கடந்த 27 நாட்களாக வெடித்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு 43 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.