பெட்ரோல் வரி இழப்பை மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்: அசிம் தாஸ் குப்தா!

திங்கள், 16 ஜூன் 2008 (20:08 IST)
மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிற்கு விற்பனை வரி குறைத்ததால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட விற்பனை வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பில் மத்திய அரசு 50 விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று வாட் குழுத் தலைவர் அசிம் தாஸ் குப்தா கூறினார்.

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம். டீசலுக்கு ரூ.3ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியது. பொதுமக்களின் எதிர்ப்பால் பல மாநில அரசுகள் இவற்றின் மீதான விற்பனை வரியை குறைத்து, விலை அதிக அளவு உயராமல் தடுத்தன.

மத்திய அரசு ஏற்கனவை மாநில அரசுகள், விலை உயர்வினால் விற்பனை வரியில் கூடுதலாக கிடைக்கும் உபரி வருவாயை” குறைக்கும் விதமாக, மாநில அரசுகள் விற்பனை வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. சில மாநில அரசுகள் விலை உயர்வின் சுமையை குறிப்பாக டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தடுக்க விற்பனை வரியை குறைத்தன.

இந்நிலையில் மதிப்பு கூட்டு வரி அமலாக்க குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, இந்த குழுவின் தலைவரும், மேற்கு வங்க நிதி அமைச்சருமான அசிம் தாஸ் குப்தா செய்தியாளர்களிடம் பேசும் போது, பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கு விற்பனை வரியை குறைத்துள்ளன. சமையல் எரிவாயுவிற்கு மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.

இதனால் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயுவின் புதிய விலையால் மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாநில அரசுகள் விற்பனை வரியில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இழந்தாலும் கூட, மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. மாநிலங்களுக்கு குறைந்த அளவே வருவாயை பெருக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதிக வளர்ச்சி பணிகளுக்கான பொறுப்புகள் உள்ளன.

மத்திய அரசு பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசலுக்கு உற்பத்தி வரியை குறைத்துள்ளது. இதனால் இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில், மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு குறைந்துள்ளது. அத்துடன் மாநில அரசுகள் விற்பனை வரி குறைத்துள்ளன. இவை இரண்டையும் சேர்த்து மாநிலங்களுக்கு ரூ.8,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 33 மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் 10 மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்துள்ளன. 15 மாநிலங்கள் டீசல் மீதான விற்பனை வரியை குறைத்துள்ளன. டில்லி போன்ற மாநிலங்கள் சமையல் எரிவாயு மீதான மதிப்பு கூட்டு வரியை மட்டும் குறைத்துள்ளன என்று அசிம் தாஸ் குப்தா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்