பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை: சோனியா!
வெள்ளி, 13 ஜூன் 2008 (19:44 IST)
அதிகரிக்கும் பணவீக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்பதை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர மத்திய அரசிற்கு வேறு வழியில்லை என்றார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, மாநில அரசுகள் மானியங்களை அதிகரிப்பதுடன் வரிகளையும் குறைப்பதன் மூலம் மக்கள் மீதான சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து கெளகாத்தியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியில் சோனியா காந்தி ஆற்றிய உரையில், "சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணை விலை உயர்வை முன்னிட்டு நாங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளோம். அதைத் தவிர வேறு வழியில்லை... பா.ஜ.க. ஆட்சியின்போது பேரல் ஒன்று 40 டாலர் என்றிருந்த கச்சா எண்ணெய் தற்போது 140 டாலராக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அதிகரிக்கும் பணவீக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வின் முழுமையான பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளினால் அரசிற்கு அளவிட முடியாத அழுத்தம் உருவாகியுள்ளது" என்றார்.
அண்டை நாடுகளிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் விட இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை குறைவானது என்று குறிப்பிட்ட சோனியா, அதிகரிக்கும் எண்ணெய் விலை பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும் போது அணுசக்தி போன்ற மாற்று எரிபொருட்களுக்கு மாறுவது மிகவும் முக்கியம் என்றார்.