சிறிய கார்களுக்கு உற்பத்தி வரி குறைக்க வேண்டும்!

சனி, 7 ஜூன் 2008 (13:16 IST)
பெட்ரோல் விலை ஏற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை கட்டு‌ப்படுத்த சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்களுக்கு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளார்.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஏற்படும் பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ளும் யோசனயை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சிரோன்மணி அகாளி தள கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நான்கு, இரண்டு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரியை மாற்றியமைக்க வேண்டும்.

இதன்படி குறைந்த எரிபொருளை பயன்படுத்தும் சிறிய ரக கார்களுக்கும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் உற்பத்திவரியை குறைக்க வேண்டும். அதே நேரத்தில் பெட்ரோலை அதிக அளவு பயன்படுத்தும் பெரிய சொகுசு ரக கார்களுக்கு உற்பத்தி வரியை உயர்த்த வேண்டும்.

இதன்மூலம் குறைந்த எரிபொருளை செவழிக்கும் வாகனங்கள் உற்பத்தி செய்ய ஊக்கமளிக்க வேண்டும்.

இதேபோல் குறைந்த எரிபொருளில் அதிக தூரம் ஒடக்கூடிய ஹைபிரிட் கார்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்குவிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் வரிகளை குறைக்க வேண்டும். இவை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் வரை, அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் கார்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை 50 விழுக்காடு குறைக்க வேண்டும்.

இதேபோல் அரசுக்கு சொந்தமான வாகனங்களின் எரிபொருள் உபயோகத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடக்கமாக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பிற்காக (வி.வி.ஐ.பி) அனுப்பப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இதற்கு பொருள் மிக முக்கிய நபர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டாம் என்பதல்ல, அதே நேரத்தில் உலகில் எந்த நாட்டிலும் இந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பெட்ரோலிய பொருட்களின் உபயோகத்தை குறைக்க தேவையான ஆலோசனைகளை கூறி கடந்த நான்கு நாட்களில் நரேஷ் குஜ்ரால் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்