பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

வெள்ளி, 6 ஜூன் 2008 (19:21 IST)
மாநில அரசுகளத‌ங்களுக்கு விற்பனை வரியால் கிடைக்கும் உபரி வரி வருவாயை குறைத்துக் கொள்ள சம்மதிதததால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1, டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.50 பைசா குறைய வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.3 உயர்த்தியது. இந்த விலை உயர்வால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகளுக்கு விற்பனை வரி மூலம் ரூ.1 உபரி வருவாய் கிடைக்கும். அதே போல் 1 லிட்டர் டீசல் மீது 0.50 பைசா உபரி வருவாய் கிடைக்கும்.

பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் அதிக அளவு பாதிக்காத வகையில், விலை உயர்வால் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் உபரி வருவாயை குறைக்கும் வகையில், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் விற்பனை வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைசசர் முரளி தியோரா மாநில முதல்வர்களுக்கும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பொதுமக்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிக பட்ச நிவாரணம் வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. மத்திய அரசு ரூ.1,20,000 கோடி சுமையை ஏற்றுக் கொண்டுள்ளது. பொதுமக்களின் பாதிப்பை குறைக்கும் வகையில், அவர்களுக்கு உதவி செய்வதில் மாநில அரசுகள் பின்தங்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலிய பொருட்களின் விலை அதிக அளவு உயராமல் இருக்கும் வகையில், மத்திய அரசு ஏற்கனவே இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைத்துள்ளது.

அதேநேரத்தில் மாநில அரசுகள் விற்பனை வரியை குறைப்பதால், அவைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது. ஏனெனில் விலை உயர்த்தியதால் மாநில அரசுகளின் விற்பனை வரி வருவாயும் அதிகரிக்கும்.

முனபு இருந்த நிலையை விட, தற்போதைய விலை உயர்வால் கிடைக்கப்போகும் விற்பனை வரியின் உபரி வருவாயை இழக்கும் வகையில், மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்க வேண்டும்" என முரளி தியோரா சுட்டிக் காட்டியுள்ளார்.

உதாரணமாக ஆந்திராவில் பெட்ரோலுக்கு 33%, டீசலுக்கு 22.25%, விற்பனை வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய விலை உயர்வால் ஆந்திராவுக்கு பெட்ரோல் மீதான விற்பனை வரியால் ரூ.1.38, டீசல் விற்பனை வரியால் ரூ.0.59 பைசா உபரி வருவாயாக கிடைக்கும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோலுக்கு 30.64%, டீசலுக்கு 28% விற்பனை வரி விதிக்கப்படுகிறது. புதிய விலையால் மாநில அரசுக்கு பெட்ரோலில் ரூ.1.17 பைசா, டீசலில் ரூ.0.75 பைசா உபரி வருவாயாக கிடைக்கும்.

பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோலுக்கு 31.68%, விற்பனை வரி விதிக்கப்படுகிறது. புதிய விலையால் மாநில அரசுக்கு பெட்ரோலில் ரூ.1.16 பைசா உபரி வருவாயாக கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை அதிகம் பாதிக்காத வகையில் தமிழக அரசு டீசலின் மீதான விற்பனை வரியை 2 விழுக்காடு குறைத்துள்ளது. முன்பு ஹைஸ்பீட் டீசலுக்கு 23.43%, சாதாரண டீசலுக்கு 25% விற்பனை வரி விதிக்கப்பட்டது. இதை தற்போது 21.43% ஆக குறைத்துள்ளது.

மத்திய அரசின் விலை உயர்வால், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.3.29 அதிகரித்தது.

தமிழக அரசின் விற்பனை வரி குறைப்பால் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.0.60 பைசா முதல் ரூ.0.65 பைசா வரை குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்