பெட்ரோல்,டீசல் மீதான விற்பனை வரி ரத்து: காங். முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள்!
வியாழன், 5 ஜூன் 2008 (13:23 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வின் காரணமாக சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ள சுமையில் மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளதற்கு மறுநாள் சோனியா காந்தி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை நீக்கியதன் மூலம் மத்திய அரசு ரூ.22,660 கோடி வருவாய் இழப்பை ஏற்றுக்கொண்டு உள்ளது. மாநில அரசுகளும் தங்களால் இயன்ற அளவு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள், தீர்வைகளைக் குறைக்க வேண்டும்" என்று பிரதமர் கூறியிருந்தார்.
நமது நாட்டில் அஸ்ஸாம், ஹரியானா, ஆந்திர பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், மராட்டியம், டெல்லி, மணிப்பூர், புதுச்சேரி, கோவா, அருணாச்சல பிரதேசம், உள்ளிட்ட 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிகள், தாங்கள் ஆளும் கேரளம், மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடத்திவரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்க மாநிலத்தில் உடனடியாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.12ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.38ம் குறைந்துள்ளது.