குஜ்ஜார் இன மக்கள் டெல்லியில் முற்றுகை: சாலை மறியல்- தடியடி!
வியாழன், 29 மே 2008 (16:02 IST)
தங்களைப் பழங்குடியினர் பட்டியில் சேர்க்கக் கோரி போராடிவரும் குஜ்ஜார்கள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லியை முற்றுகையிடுவதற்காக ஆயிரக்கணக்கான குஜ்ஜார்கள் ராஜஸ்தானில் இருந்து நேற்றே புறப்பட்டு வந்தனர். ஏராளமானவர்கள் ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களுக்குள் வாகனங்களில் வந்து இறங்கி, அங்கிருந்து டெல்லிக்கு நடந்தே வந்தனர்.
அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக எல்லா முக்கியச் சாலைகளிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் சுமார் 45,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வளவு பாதுகாப்பையும் மீறி டெல்லிக்குள் நுழைந்த குஜ்ஜார்கள், டெல்லி- நொய்டா, ஃபரிதா பாத்- குர்கான், டெல்லி- ஹபூர், டெல்லி- காசிப்பூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன், அரசுப் பேருந்துகளுக்குத் தீ வைக்க முயன்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக டெல்லி நகரைச் சுற்றி 70 இடங்களில் வசிக்கும் குஜ்ஜார்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் டெல்லியில் நுழையும் இருப்புப் பாதைகளில் அமர்ந்து மறியல் நடத்தினர். இதனால் காசிபூர் வழியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து புறப்படும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
குர்கானில் போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதையடுத்து லேசான தடியடியுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் காவல்துறையினர் கலைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் இன மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திவரும் போராட்டத்தினால், மாநிலம் முழுவதும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இப்போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைகளுக்கு 39 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், குஜ்ஜார்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அவர்களுக்கு ஆதரவாக ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் குஜ்ஜார் இன மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
குஜ்ஜார் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது மாநில அரசின் கைகளில் இல்லை. அது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளதால், குஜ்ஜார் இன மக்களின் பார்வை தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளது.