பெட்ரோலிய நிறுவன இலாபம் மீது வரி - மார்க்சிஸ்ட் கம்யூ.!
வியாழன், 29 மே 2008 (14:24 IST)
பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு பதிலாக, பெட்ரோலிய நிறுவனங்களின் இலாபம் மீது வரி விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்நது வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்த ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு (பொலிட் பீரோ) நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ஐக்கிய முன்னணி அரசு தனியார் எண்ணை நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதிக்க அனுமதி அளித்து விட்டு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கஷ்டப்படும் பொதுமக்கள் மீது மேலும் சுமையை ஏற்றக் கூடாது.
இதற்கு பதிலாக அதிக இலாபம் சம்பாதிக்கும் தனியார் மற்றும் அந்நிய நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து அமைத்துள்ள பெட்ரோலிய நிறுவனங்கள் மீது வரி விதிக்க வேண்டும். அதே போல் இறக்குமதி சலுகையால் அதிக இலாபம் சம்பாதிக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது வரி விதிக்க வேண்டும்.
பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை 1 பீப்பாய் 100 டாலருக்கும் மேல் அதிகரிக்கும் போது, இந்தியாவில் எண்ணெய் துறப்பனத்தில் ஈடுபட்டுள்ள ரிலையனஸ், எஸ்ஸார், கேரின் போன்ற தனியர் நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதிக்கின்றன. இவைகளின் இலாபங்கள் மீது வரி விதிப்பது அவசியம்.
இந்த நிறுவனங்கள் எண்ணெய் துரப்பண ஒப்பந்தத்திற்காக, அரசிடம் உரிமம் பெறும் போது, இதில் எந்த நிறுவனமும் 1 பீப்பாய் விலை 30 டாலருக்கும் அதிகமாக குறிப்பிட்டு, ஒப்பந்தம் பெறவில்லை.
இந்த நிறுவனங்கள் எவ்வித செலவும் செய்யாமல் 70 முதல் 80 டாலர் வரை கூடுதல் இலாபம் பெறுவதை அரசு தடுக்க தவறி விட்டது. இதே மாதிரி ஒப்பந்தங்களில் மற்ற நாடுகள் இலாபத்தின் மீது வரி விதிக்க, ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களுடன் மறு பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு அறிக்கையில் கூறியுள்ளது.