காஷ்மீரில் மனித உரிமை மீறல்: 223 பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை!
வியாழன், 22 மே 2008 (14:07 IST)
மனித உரிமை மீறல்கள், விசாரணைக் கைதிகளின் மரணங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் 223 பாதுகாப்புப் படையினர் மீது ஜம்மு- காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கடந்த 5 ஆண்டுகளில் விசாரணைக் கைதிகளின் மரணங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ள 223 பாதுகாப்புப் படையினரில், 90 பேர் ராணுவத்தினர், 82 பேர் துணைநிலை ராணுவத்தினர், 51 பேர் காவலர்கள் ஆவர்" என்று அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக பி.டி.ஐ. கூறுகிறது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலக் காவல்துறையினரின் செயல்பாட்டை மேம்படுத்துதல், அவர்களுக்கு மற்ற பாதுகாப்புப் படையினருடன் உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கும் பரிந்துரைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அதுபற்றி முதலமைச்சர் தலைமையிலான குழு ஒன்று ஆய்வுசெய்து வருகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.