எல்லையில் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும்: இந்தியா- பாகிஸ்தான் உறுதி!
புதன், 21 மே 2008 (20:23 IST)
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 5ஆவது கட்ட அமைதிப் பேச்சில், எல்லையில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளதாக இருதரப்புப் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நல்லெண்ணப் பேச்சுக்கள் நடந்து வருகின்றன. 4 ஆவது கட்டப் பேச்சு முடிவடையவிருந்த நிலையில் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதால் பேச்சு தடைபட்டது.
இதையடுத்து பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இஸ்லாமாபாத்தில் நேற்று நல்லெண்ணப் பேச்சு மீண்டும் துவங்கியது. முதலில் 4ஆவது கட்டப் பேச்சின் இறுதிப் பகுதி பூர்த்தி செய்யப்பட்ட பிறகு 5ஆவது கட்டப் பேச்சு துவங்கியது.
முதலில் இருநாட்டு அயலுறவுச் செயலர்கள் மட்டத்தில் நடந்த பேச்சில் இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், பாகிஸ்தான் அயலுறவுச் செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பேச்சில் அமைதி, பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான திட்டங்கள் ஆகியவை தொடர்பாக விவாதிக்ப்பட்டது.
அப்போது, அண்மையில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு பற்றியும், அதில் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தது பற்றியும் இந்திய அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
சர் கிரீக், சியாச்சின் சிகரப் பிரச்சனை, இந்தியா- பாகிஸ்தான்- ஈரான் இடையிலான எரிவாயு குழாய்த் திட்டம், இருநாடுகளின் சிறைகளில் வாடும் மாற்று நாட்டுக் கைதிகளின் நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இப்பேச்சிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "எல்லையில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அமைதி, பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விடயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருதரப்பிலும் பொதுவான கருத்து உள்ளது
சர் கிரீக், சியாச்சின் பிரச்சனைகளில் தீர்வை நெருங்கிவிட்டோம். சியாச்சின் அமைதி மலையாக மாற்றப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.