ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். இல்லை!
செவ்வாய், 20 மே 2008 (21:03 IST)
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 13 ஆம் தேதி நடந்த 9 குண்டுவெடிப்புகளிலும் ஆர்.டி.எக்ஸ். பயன்படுத்தப்படவில்லை என்று தேசப் பாதுகாப்புப் படையும், தடயவியல் அறிஞர்களும் ஒருவார கால ஆய்விற்குப் பிறகு தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்த இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களை ஆய்வு செய்ததில், ஆர்.டி.எக்ஸ். பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. குண்டுகளில் அழுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், நியோஜெல்-90 ஆகியவை மட்டுமே முக்கிய மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தடவியல் ஆய்வகமும், தேசப் பாதுகாப்புப் படையும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சம்பவ இடங்களில் ஆய்வு நடத்திய வெடிகுண்டு வல்லுநர்கள், குண்டுகளில் அம்மோனியம் நைட்ரேட்டுடன் இரும்பு உருளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டது.
இதுகுறித்து தேசப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த முறையில் வெடிகுண்டுகளைத் தயாரித்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்பதைத் தெரிந்து பயங்கரவாதிகள் பின்பற்றியுள்ளனர். குண்டுகளைத் தயாரிப்பதில் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளதையே இது காட்டுகிறது" என்றார்.
ராஜஸ்தான் காவல்துறைத் தலைவர் ஏ.எஸ்.கில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் ஆகியோர், குண்டுகளில் ஆர்.டி.எக்ஸ். பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியதற்கு எதிராகக் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.