கடந்த சில மாதங்களாக தொடர்நது அதிகரித்து வந்த உணவுப் பொருட்களின் விலை, தற்போது நிலையாக இருப்பது தெரியவந்துள்ளது.
உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை, சில மாதங்களாக அதிகரித்து வந்தது. இதனால் பணவீக்கம், கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு மார்சி 31 ந் தேதி சமையல் எண்ணெய் இறக்குமதி வரி ரத்து, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்து. இது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அத்துடன் முன்பேர வர்த்தக சந்தையில் கோதுமை, அரிசி, கொண்டக் கடலை, ரப்பர், சோயா எண்ணெய், உருளைக் கிழங்கு வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில் விலை அதிகரிக்காமல் ஒரே நிலையாக உள்ளது. சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு பெரு நகரங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காமல் நிலையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலை எண்ணெய் தவிர மற்ற 13 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நான்கு பெருநகரங்களிலும் உயராமல் நிலையாக இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிற்கு விற்பனைக்கு வந்ததால், பருப்பு போன்ற நவதானியங்கள், சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் விலை மே 9 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உயராமல், நிலையாக உள்ளது.
டெல்லியில் கடலை பருப்பு விலை கிலோ ரூ.42 ஆகவும், துவரம் பருப்பு விலை கிலோ ரூ.36 ஆகவும் உயராமல் இருக்கின்றது. இதே போல் கோதுமை கிலோ ரூ.13, கோதுமை மாவு கிலோ ரூ.14 ஆக அதிகரிக்காமல் இருக்கின்றது.
அதே நேரத்தில் கடலை எண்ணெய் விலை ரூ.1 அதிகரித்து, இதன் விலை கிலோ ரூ.121 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ஏப்ரல் 26 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.61 விழுக்காடாக இருந்தது. இது மே 3 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கையால் சில பொருட்களின் விலை குறையும்.
பெரு நகரங்களில் வாழ்க்கை செலவு அதிகளவு உள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயராமல், ஒரே மாதிரியாக இருந்தால், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதனால் பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தனர்.