மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சோடேபூரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர், குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
உடல் கருகி இறந்த 7 பேர் உடல்களும் மீட்கபட்டுள்ளன. 3 அடுக்கு கட்டிடமான அங்கு இரண்டாவது மாடியில் வெல்டிங் வேலை நடந்து வந்ததாகவும் அதிலிருந்து கிளம்பிய தீ விறுவிறுவென வளாகம் முழுதும் பரவியதாக தகவல்கள் கூறுகின்றன.
நகரின் ஜன நெரிசல் அதிகமான பகுதியில் உள்ள இந்த வணிக வளாகத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வளாகத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக் கொண்டு சென்று உள்ளே சிக்கியவர்களை காப்பாற்றியுள்ளனர்.
தீப்புகை அதிகமாக எழுந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் வணிக வளாகத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெருப்பை அணைக்க வந்த தீயணைப்புப் படையினரில் 6 பேர் புகையால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.