பாக். படையினர் துப்பாக்கி சூடு -மன்மோகன் கவலை!

வியாழன், 15 மே 2008 (10:57 IST)
வடக்கு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இந்திய எல்லையை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

காரண காரியமற்ற இந்த துப்பாக்கி சூடு குறித்த இந்தியாவின் கவலைகளை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள அயலுறவு அமைச்சர் மட்ட பேச்சு வார்த்தைகளில் இந்திய-பாகிஸ்தான் உறவுகளின் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.

காஷ்மீர் வடக்குப் பகுதியில் உள்ள தங்தார் ராணுவ முகாம் நோக்கி கடந்த நாள் மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் 50 முதல் 60 சுற்றுக்கள் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

டிசம்பர் 2003 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டுவரும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பெரிய அளவில் மீறியுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்