கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்த 71 பேருக்கு மத்திய அரசு, விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுக்கு 13 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 35 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல், பிரபல சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே.பச்சூரி, பேராசிரியர் பிருத்விநாத் தார், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன தலைவர் ஈ.ஸ்ரீதரன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
இதேபோல் இந்தி நடிகை மாதுரி தீட்ஷித், ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன், கால்பந்து விளையாட்டு வீரர் பைசுங் பூடியா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.
பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அமெரிக்காவில் வசிக்கும் பிரபல விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சுரேஷ்குமார் நியோதியா ஆகியோர் விருது பெற வரவில்லை.
விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.