கர்நாடக சட்டப் பேரவைக்கு 89 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 10, 16, 22 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.
தும்கூர், சிக்பல்லாபூர், கோலார், பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், ராம்நகர், மண்டியா, ஹாசன், குடகு, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய 11 மாவட்டங்களில் அடங்கிய 89 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. துவக்கத்தில் மந்தமாகவே இருந்தது. சில வாக்குச்சாவடிகளில் 7.30 மணிவரை யாருமே வாக்களிக்க வரவில்லை. அதன்பிறகு ஒவ்வொருவராக வந்து வாக்களித்துச் சென்றனர். நேரம் ஆக ஆக பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரித்தது. எனவே அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்.
மண்டியா, மைசூர், ராம்நகர், தும்கூர், கோலார், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆர்வத்தோடு வந்து வாக்களித்தனர். ஆனால் பெங்களூரு நகரில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.
பகல் 12 மணியளவில் 20 விழுக்காடு வாக்குகளும், பிற்பகல் 1 மணியளவில் 30 விழுக்காடு வாக்குகளும், பிற்பகல் 2 மணியளவில் 36 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருந்தன. பிற்பகல் 3 மணியளவில் இது 45 விழுக்காடாக அதிகரித்தது.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது சராசரியாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்ததாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வித்யா சங்கர் தெரிவித்தார்.
கள்ள வாக்கு அளிக்க முயன்றதாக 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மற்ற இரு கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு மே 25ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று மாலையே அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும்.