இராமர் பாலமா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!

வியாழன், 8 மே 2008 (18:11 IST)
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பகுதியில் உள்ள நிலத்திட்டுக்கள் இராமர் பாலம்தானா என்பதைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்விற்கு உட்படுத்தி, அதனை புராதன சின்னமாக அறிவிக்கும் சாத்தியக் கூறு குறித்து மத்திய அரசு ஆலோசித்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

“சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல அது இராமர் கட்டியதுதானா என்பதை தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்து, அது உறுதியானால் அதனை புராதன சின்னமாக அறிவிப்பது குறித்த சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும்” என்று நீதிமன்றக் குழு கேட்டுக்கொண்டது.

இவ்வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உச்ச நீதிமன்ற அமர்வு, சேது சமுத்திரத் திட்டத்தை வேற்றுப் பாதையில் நிறைவேற்றும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்தும் ஆராயும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்