மாநிலங்களவை காலவரையின்றித் தள்ளிவைப்பு!
செவ்வாய், 6 மே 2008 (16:38 IST)
கடும் எதிர்ப்பிற்கு இடையில் பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவை இன்று காலவரையின்றித் தள்ளிவைக்கப்பட்டது.
இத்துடன், 2008 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவிற்கு வந்தது. முன்னதாக, நேற்று மக்களை காலவரையின்றித் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,
மாநிலங்களவை இன்று கூடியதும் சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் வரை அமைதியாக இருக்குமாறு அவர்களை அவைத் தலைவர் ஹமீது அன்சாரி கேட்டுக்கொண்டார்.
பின்னர் மியான்மரில் புயல் தாக்கி இறந்தவர்களுக்கும், தபேலா வித்துவான் கிஷான் மகராஜிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
12 மணி வரை தள்ளிவைப்பு!
இதையடுத்து, வட இந்தியர்களுக்கு எதிராக மராட்டிய நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசியதைக் கண்டித்து முழக்கமிட்டதுடன், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சாஹித் சித்திக் உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ராஜ் தாக்கரேவைக் கைது செய்து அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், அவையின் நடுவில் வந்து கூடியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதேநிலை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால் அவையை 12 மணி வரை தள்ளிவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு!
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு அவை கூடியதும் எழுந்த ஐக்கிய ஜனதாதளக் கட்சி உறுப்பினர் சரத் யாதவ், பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவிற்கு எதிராகப் பேச முயற்சித்தார். அதற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமர் சிங் உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்களுடன் சரத் யாதவ் சேர்ந்து கொண்டார்.
அவர்கள், ஜனநாயக அடிப்படையில் தங்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக குற்றம்சாற்றினர்.
விதிகளின்படி, அவையில் சட்ட வரைவு அறிமுகம் செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதுகுறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
இருந்தாலும் அந்த வாதங்களை அவைத் தலைவர் பொருட்படுத்தவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்றாவது அமைதி காக்குமாறு அவர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு தாக்கல்!
இந்நிலையில், பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவை அறிமுகம் செய்வதற்காக மத்திய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் எழுந்தார்.
அப்போது குறுக்கிட்ட அபு ஆசிம் ஆஷ்மி உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள், சட்ட வரைவின் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்க முயற்சித்தனர். அமைச்சருக்கு அருகிலிருந்த அமைச்சர்கள் அம்பிகா சோனி, குமாரி ஷெல்ஜா, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஆகியோரும் அம்முயற்சியை முறியடித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் சட்ட வரைவை வெற்றிகரமாக குரல் வாக்கெடுப்பின் மூலம் அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அவை காலவரையின்றித் தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.