மக்களவை கூட்டத் தொடர் முன்னதாகவே முடிந்தது!

திங்கள், 5 மே 2008 (17:30 IST)
மூன்று மாதங்களாக நடந்து வந்த மக்களவையின் நிதிநிலை கூட்டத் தொடர், இன்னமும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் இன்று திடீரென்று முடித்துக்கொள்ளப்பட்டது!

இந்த கூட்டத் தொடரிலேயே பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட முன்வரைவு அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலவரையின்றி அவை தள்ளிவைக்கப்பட்டதற்கு இடதுசாரி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நிதிநிலை கூட்டத் தொடரின் போது மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட 32 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனைக்கு அவையில் சுமூகமாகத் தீர்வு காணப்பட்டவுடன் அவை நடவடிக்கைகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

முறை தவறி நடந்துகொண்டதாக குற்றம் சாற்றப்பட்ட உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டாலும், "இப்படிப்பட்ட தேவையற்ற தடைகளும், தள்ளிவைப்புகளும், அவைத் தலைவரின் உத்தரவுகளை புறக்கணித்ததலும் பொது நலன் என்கின்ற இலக்கை எட்டுவதற்கு குந்தகம் விளைவித்துவிட்டன" என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.

நான்கு நாட்களுக்கு முன்னரே அவை நடவடிக்கைகள் முடித்துக்கொள்ளப்பட்டதற்கு காரணம், காங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டதே என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றம் சாற்றினார்.

இந்த கூட்டத் தொடரிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்த நிலையில், அவை நடவடிக்கைகள் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே முடித்துக் கொள்ளப்பட்டது ஜனநாயக அமைப்பிற்கு எதிரான மோசடி என்று குருதாஸ் தாஸ் குப்தா சாடினார்.

இந்த கூட்டத் தொடர் முழுவதும் விலைவாசி உயர்வு பிரச்சனையின் மீது எதிர்க்கட்சிகளும், ஆட்சிக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரிகளும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 10 ஆம் கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், மக்களவையில் விவாதிக்கப்படும் பிரச்சனைகள் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே தொடரை முன்னதாக முடித்துக்கொள்ள ஆளும் கூட்டணி முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்