காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே காலமானார்!
மூத்த காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே இன்று காலை புது டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 79.
மாநிலங்களவை உறுப்பினரான நிர்மலா தேஷ்பாண்டே கடந்த மூன்று நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார் என்றும், இன்று அதிகாலை உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
"தன்பாத்தில் இருந்து கடந் செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்பிய தேஷ்பாண்டேவிற்கு வாயுத்தொல்லை இருந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார்" என்று அவரது நெருங்கிய உறவினரான ராஜஸ்ரீ பி.டி.ஐ. நிறுவனத்திடம் கூறினார்.
புனேவில் இருந்து தேஷ்பாண்டேவின் சகோதரி வந்தவுடன் வெள்ளிக்கிழமை காலை இறுதி நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாநிலங்களவையின் நியமன உறுப்பினரான நிர்மலா தேஷ்பாண்டே நேற்று மாலை வரை அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அவர் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். அவரின் தந்தை பி.ஒய்.தேஷ்பாண்டே மராட்டிய எழுத்தாளர் ஆவார்.
மிகச்சிறந்த காந்தியவாதியான நிர்மலா தேஷ்பாண்டே தனது பணிகளுக்காக கடந்த 2006 ஆம் ஆண்டு பத்ம விபூசன் விருது பெற்றார்.
1929 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி நாக்பூரில் பிறந்த அவர், 1952 ஆம் ஆண்டு வினோபா பாவேவின் பூதன் இயக்கத்தில் இணைந்ததன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். வினோபா பாவேவுடன் 40,000 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
நிர்மலா தேஷ்பாண்டேவின் மறைவுச் செய்தி அறிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்கள் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.