சேதுக் கால்வாய் வழக்கு : விசாரணை ஒரு நாள் தள்ளிவைப்பு!

புதன், 30 ஏப்ரல் 2008 (14:20 IST)
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெறுவதாக இருந்த இறுதிகட்ட விசாரணை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு நாளை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!

சேதுக் கால்வாய் திட்டப் பகுதியில் உள்ள நிலத்திட்டு ராமர் பாலமே என்றும், அதனை இடித்துவிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கு நாளைக்குத்தான் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதாக தாங்கள் கருதியிருந்ததாக நீதிமன்ற அமர்வு முன் விண்ணப்பித்தார்.

அதனை ஏற்ற நீதிமன்ற அமர்வு, இறுதிகட்ட விசாரணையை ஒரு நாள் தள்ளிவைத்து நாளை நடைபெறும் என்று அறிவித்தது.

முன்னதாக இவ்வழக்கில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டக் கழகத்திற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ·பாலியெஸ் நாரிமேன், ராமர் பாலம் என்றழைக்கப்படும் அந்த நிலத்திட்டுப் பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அளித்த தடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரினார்.

ராமர் பாலம் என்றழைக்கப்படும் நிலத்திட்டுக்களை காக்க வேண்டும் என்று கோரி வழக்கில் இணைத்துக்கொண்ட மற்ற மனுதாரர்களின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சனை என்பதால் இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசசமைப்புக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவ்வழக்கில் மற்றொரு மனுதாரர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி, இத்திட்டம் 150 ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு வந்த ஒன்று என்ற நிலையில், இதனை நிறைவேற்றுவதில் வழக்கறிஞர் ·பாலியெஸ் நாரிமேன் காட்டும் அவசரத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

மூத்த வழக்கறிஞர் ·பாலியெஸ் நாரிமேன் கோரிக்கையின்படி, ஒரு நாளில் இவ்வழக்கை முடிவு செய்துவிட முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே, இவ்வழக்கின் முக்கிய மனுதாரரான சுப்பிரமணியம் சுவாமி, இவ்வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுவையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் கப்பல்கள் மீனம் ·பிஷரிஸ் பப்ளிக் லிமிடெட் எனும் அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரியது என்றும், எனவே இத்திட்டத்தில் இருந்து அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இத்திட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கும் தொடர்புள்ளது என்றும் அம்மனுவில் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்