அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "விலைவாசியைக் குறைக்க மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்திப்போம். விலை உயர்வைக் கட்டுப்படுத்த 5 அல்லது 6 வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். இதனை செயல்படுத்தவில்லையெனில் எதிர்காலத் திட்டம் என்ன என்பதை முடிவு செய்வோம் என்று கூறினார்.
விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கைவிட்டு, கொள்கையை மாற்றிவிட்டு உறுதியான முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்துவோம் என்றார் அவர்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் காட்டப்பட்ட தீவிரம் விலைவாசி விவகாரத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் காரத், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நிலை இருந்தது என்றார்.