சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் கடற்பகுதியில் அமைந்துள்ள நிலத் திட்டுக்கள் ராமர் பாலம் என்று கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதி விசாரணை நாளை மறுநாள் (30 ஆம் தேதி) நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
உச்ச நீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் ·பாலியெஸ் நாரிமேன் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எம்.கே. சர்மா ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, 30 ஆம் தேதியன்று முதல் வழக்காக ராமர் பாலம் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்துள்ள இவ்வழக்கில், ராமர் பாலம் இந்துக்களின் நம்பிக்கை என்றும், சேதுக் கால்வாய் திட்டத்திற்காக அதனை தகர்க்க அனுமதிக்கக்கூடாது என்றும் கோரியுள்ளார்.
சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியில், மனிதனால் கட்டப்பட்ட எந்த கட்டுமானமும் இல்லை என்றும், ராமர் பாலம் என்றழைக்கப்படும் நிலத்திட்டுக்கள் இயற்கையாக உருவானவைதான் என்று தமிழக அரசும், மத்திய அரசும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.