10 செயற்கைக் கோள்களை செலுத்தி பி.எஸ்.எல்.வி. புதிய சாதனை!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (12:50 IST)
இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான பி.எஸ்.எல்.வி. நமது நாட்டின் 2 செயற்கைக் கோள்கள் உட்பட 10 செயற்கைக் கோள்களை ஒரே ஏவலில் புவி சுழற்சிப் பாதையில் செலுத்தி சாதனை புரிந்துள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட பி.எ‌‌ஸ்.எல்.வி.- சி9 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் 16 நிமிட நேர பயணத்திற்குப் பின்னர், ஒவ்வொரு செயற்கைக்கோளாக புவி மைய சுழற்சிப்பாதையில் செலுத்தியது. ஒரே ஏவலில் 10 செயற்கைக்கோள்கள் துல்லியமாக செலுத்தப்பட்டது நினைவில் நிற்கக்கூடிய, வரலாற்று நிகழ்வு என்று இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் கூறினார்.

இது பி.எஸ்.எல்.வி.யின் 12வது வெற்றிகரமான பயணம் என்று கூறிய மாதவன், இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளனர் என்றார்.

10 செயற்கைக்கோள்களைத் தாங்கிச் சென்ற பி.எஸ்.எல்.வி.யின் பயணம் திட்டமிட்ட பாதையில் துல்லியமாக இருந்தது என்று கூறிய மாதவன் நாயர், பி.எஸ்.எல்.வி.யைப் பயன்படுத்தி சந்திரனுக்கு ஆய்வுக் கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வெற்றி மிக குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்