பனிமலை உருகுதல் : ஆய்வு குழுவை அனுப்புகிறது சிக்கிம்!
புதன், 23 ஏப்ரல் 2008 (12:20 IST)
புவி வெப்பமடைதல் காரணமாக சிக்கிம் பனி மலைகள் உருகும் விழுக்காடு அளவுக்கு அதிகமாகியுள்ளது என்ற தகவல்களை அடுத்து அதனை ஆய்வு செய்யவும், அதனை தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறியவும் சிக்கிம் அரசு உயர்மட்ட ஆய்வுக்குழுவை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
பேராசிரியர் ஹஸ்னைன் தலைமையிலான இந்தக்குழு நாளை முதல் 9 நாட்களுக்கு கிழக்கு ரதோங் பனிமலைப்பகுதியில் முகாமிட்டு ஆய்வுகள் மேற்கொள்கிறது.
சிக்கிம் பனிமலைகளை ஆய்வு செய்த பிரிட்டன் குழு அங்கு பனிமலைகள் எச்சரிக்கை நிலைக்கும் அதிகமான அளவில் உருகி வருகிறது என்றும், இதனால் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படவுள்ளது என்றும், தீஸ்தா, ராங்கீத் நதிகள் வற்றும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சிக்கிமின் ஜெமு, தோங்சோங், தாலுங் ஆகிய பனிமலைகளின் நிலப்பகுதிகள் கடந்த 80 ஆண்டுகளில் கடுமையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிக்கிமின் பழைமையான பனிமலைகள் உருகுவது பற்றிய அறிக்கையை வெளியிட்டு உலக மக்களின் கவனத்தை புவி வெப்பமடைதல் குறித்து திருப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.