மக்களிடம் தேவையற்ற பயத்தைப் பரப்பும் சக்திகள்: ககோட்கர்!
திங்கள், 21 ஏப்ரல் 2008 (20:20 IST)
அணு ஆய்வுகளைப் பற்றி மக்களிடம் தேவையற்ற பயத்தைப் பரப்பிவரும் சக்திகளைக் கடுமையாகச் சாடிய தேசிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், அவர்கள் இந்த விடயத்தைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ளாமல் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாற்றினார்.
அகர்தலாவில் புற்றுநோய்த் தடுப்பு நிகழ்ச்சி ஒன்றின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய அனில் ககோட்கர், "அணு ஆராய்ச்சியால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றிக் கூற ஏராளமான சக்திகள் உள்ளன, ஆனால் வல்லுநர்கள் கூற்றைத்தான் நாங்கள் கேட்போமே தவிர அச்சக்திகள் கூறுவதை அல்ல" என்றார்.
இப்படிச் சொல்லும்போது, எதிர்க்கும் சக்திகளுக்கு உதாரணமாக எந்தவொரு தனி நபர், குழு அல்லது அமைப்பின் பெயரையும் ககோட்கர் குறிப்பிடவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அணு சக்தி ஆணையத்தின் பொதுமக்கள் விழிப்புணர்வுத் துறைத் தலைவர் எஸ்.கே. மல்ஹோத்ரா, அணு ஆராய்ச்சிக்கு முக்கிய மூலப்பொருளான யுரேனியம் மேகாலயாவில் ஏராளமாகக் கிடைக்கிறது. ஆனால், அணு ஆராய்ச்சின் மோசமான விளைவுகளை எதிர்க்கும் சக்திகளின் காரணமாக அதைப் பிரித்து எடுக்க முடியவில்லை என்றார்.
"முறையான அறிவில்லாதது சமூதாயத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்துச் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மல்ஹோத்ரா, "மேகாலயாவில் யுரேனியம் பிரித்தெடுப்பதில் உள்ள பிரச்சனை குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விசாரணைக்குப் பிறகு மாநில அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்தால் யுரேனியம் எடுக்கும் பணி தொடரும்" என்றார்.