விலைவாசி உயர்வு: கடை அடைப்பு!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (11:49 IST)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 12 மணி நேர மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது.

உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் தவறிவிட்டன என்று மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த 12 மணி நேர கடை அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு துவங்கியது.

கடை அடைப்பு போராட்டத்தை பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், நாங்கள் விலை உயர்வு குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. மத்திய அரசு விலை உயர்வால் மக்கள் படும் கஷ்டங்களை போ‌க்க தவறிவிட்டது. இதனால் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றோம்.

விலை உயர்வால் பொதுமக்களுக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், இதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் கவலைப்படாமல் இருக்கின்றது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்