ஒலிம்பிக் சுடருக்கு எதிர்ப்பு: 60 திபெத்தியர்கள் கைது!
வியாழன், 17 ஏப்ரல் 2008 (17:03 IST)
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கூடிய 60 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையில் உள்ள ராஜபாதை முழுவதும் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 60 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ராஜ்காட் மகாத்மா காந்தி சமாதியில் கூடிய நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் அமைதி வழிபாடு நடத்தியதுடன், அங்கிருந்து ஜந்தர் மந்தர் வரை அமைதிச் சுடர் ஓட்டம் நடத்தினர்.
திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்தும், திபெத்தின் விடுதலை மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தியும் இந்த அமைதிச் சுடர் ஓட்டம் நடப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் திபெத்தை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், திபெத் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் துவக்கி வைத்த இந்த அமைதி ஒட்டத்தில் சிவப்பு உடை அணிந்த புத்த மதத் துறவிகள், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.