முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் மொஹமத் மக்பூல் தார் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65.
இவருக்கு 2 மனைவிகளும் 5 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக ஷெர்-இ காஷ்மீர் மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார்.
காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷாங்கஸ் என்ற இடத்தில் 1943ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் மக்பூல் தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு 1971ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
1975ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1987ல் தோல்வியுற்றார். அதன் பிறகு சுயேட்சையாக தேர்தலில் நின்றார்.
1996 ஆம் ஆண்டு ஜனதா தள வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேவகவுடா தலைமையிலான அரசில் இவர் உள்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.