விலைவாசி: இரட்டை வேடமிடும் இடதுசாரிகள்- பா.ஜ.க. குற்றச்சாற்று!
புதன், 16 ஏப்ரல் 2008 (16:36 IST)
விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிகள் இரட்டை வேடமிடுவதாக பா.ஜ.க. குற்றம்சாற்றி உள்ளது.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அக்கட்சி உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி, எதிர்க்கட்சி வரிசையில் நின்று அரசைக் கவிழ்க்க இடதுசாரிகள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாநிலங்களவையில் இன்று விலைவாசி உயர்வு மீதான விவாதத்தைத் துவக்கி வைத்த பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மந்திரக் கயிறு எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், பொது மக்கள் தங்களிடம் உள்ள தடியைப் பயன்படுத்தத் துவங்கினால் அது மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது" என்றார்.
"எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுமளவு உயர்கிறது. பணவீக்கமும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கிறது.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு 2008/09 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நமது நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதுதான் சிறப்பான சூழ்நிலை என்றால் மோசமான சூழ்நிலை எப்படி இருக்கும்?" என்றார் ஜோஷி.
மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று எச்சரித்து வரும் இடதுசாரிகளைக் குறிப்பிட்ட அவர், இடதுசாரிகள் எதிர்க்கட்சி வரிசையில் நின்று அரசைக் கவிழ்க்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தங்களின் நிலைப்பாடு அரசுடன் இருப்பதா அல்லது விலகுவதா என்பதை இடதுசாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.