விலைவாசி உயர்வு: மத்திய அரசின் மீது இடதுசாரிகள் பாய்ச்சல்!
புதன், 16 ஏப்ரல் 2008 (15:38 IST)
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டதாக இடதுசாரிகள் குற்றம்சாற்றினர்.
மத்திய அரசிற்குக் கடந்த 4 ஆண்டுகளாக ஆதரவளித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காப்பாற்றுவதற்குத் தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விட்டதாக கவலை தெரிவித்தனர்.
மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு விவகாரத்தின் மீதான சிறப்பு விவாதத்தைத் துவக்கி வைத்துப் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, "நான் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் மத்திய அரசை 4 ஆண்டுகளாக ஆதரித்தோம்... இந்தப் பரிசோதனை தோல்வியடைந்து விட்டது. அரசு அதற்குரிய இடத்தில் இல்லை" என்றார்.
அதிகரித்துவரும் விலைவாசி, பற்றாக்குறை ஆகியவற்றால் உணவிற்கான மோதல்கள் உருவாகக்கூடும் என்று கவலை தெரிவித்த தாஸ்குப்தா, இதைத் தவிர்க்கவும் தனது இருப்பை நிரூபிக்கவும் மத்திய அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விவரித்து பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்பில்லாத சந்தைச் சக்திகளிடம் வெட்கமில்லாமல் மத்திய அரசு சரணடைந்து விட்டதாகக் குற்றம்சாற்றினார்.
விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காத தீ போலப் பரவிவரும் நிலையில் அரசின் தீ தடுப்பு அமைப்புகள் எங்கே போயின என்று கேள்வி எழுப்பியதுடன், பிரதமர் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காததால் நாடு முழுவதும் வேதனையில் தவிக்கிறது என்றார் குருதாஸ் தாஸ்குப்தா.
கள்ளச்சந்தை வியாபாரிகள், பதுக்கல்காரர்கள் கைகளில் சந்தை சிக்கியுள்ளதையும், உலகளவில் பொருட்களின் விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தையும் ஒப்புக்கொண்டு வெளிப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்றார் அவர்.