டெல்லியில் சீனத் தூதரகத்தை தாக்க முயற்சி: திபெத்தியர்கள் கைது!
புதன், 16 ஏப்ரல் 2008 (15:47 IST)
புது டெல்லி: டெல்லியில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் சீனத் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயற்சித்தனர்.
மேலும், தூதரகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையமுயன்ற அவர்கள், தங்களைத் தடுக்க முயன்ற பாதுகாப்புப் படையினருடன் மோதலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் புது டெல்லியில் சீனத் தூதரகம் அமைந்துள்ள சாணக்கியபுரி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடினர். அவர்களின் கைகளில் சீன எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இருந்தன.
சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ உள்ளிட்ட சீனத் தலைவர்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி சீனத் தூதரகக் கட்டடத்தை நெருங்கிய திபெத்தியர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.
முன்னதாக, அப்பகுதியில் பாதுகாப்பிற்குக் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் திபெத்தியர்களை தூதரக் கட்டடத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு வளையங்களை அமைத்திருந்தனர்.
இந்தப் பாதுகாப்பு வளையங்களை திபெத்தியர்கள் உடைக்க முயன்றதால் பாதுகாப்புப் படையினருக்கும் திபெத்தியர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
இதையடுத்து சீனத் தூதரகத்திற்குள் நுழைய முயன்ற திபெத்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தத்வாலைச் சந்தித்த சீனத் தூதர் ஷான் யான் தூதரகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.