மும்பை குண்டுவெடிப்பு: 2 பேர் மரண தண்டனைக்குத் தடை- உச்ச நீதிமன்றம்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (16:59 IST)
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள மேலும் 4 பேரின் பிணை மனுக்கள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்குத் தாக்கீது அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற முகமது முஷ்டாக் மூசா தரணி, அஸ்கர் யூசுப் முகாடம் ஆகியோர் தங்கள் தண்டனையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு விசாரித்தது.
பின்னர், அவர்கள் இருவரின் தண்டனையையும் நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குற்றவாளிகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளையும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு தாக்கீது அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சுலேமான் முகமது காசிம் காவத், பஷிர் அகமது உஷ்மானி கனி, தாவூத் (எ) தாவூத் தக்லியா, ஃபார்ஷ் அகமது கான் ஆகிய 4 பேரின் மேல் முறையீடு தொடர்பாகவும் மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்குத் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக தண்டனை பெற்றுள்ளவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், சரியான ஆதாரங்களைக் கவனத்தில் கொள்வதில் மும்பை தடா நீதிமன்றம் சரியாகச் செயல்படவில்லை என்று குற்றம்சாற்றினர்.
1993 மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இவ்வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்களைப் பதுக்கிய குற்றச்சாற்றில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.