மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு எதிரான வழக்கு நிராகரிப்பு!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:25 IST)
நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த ரூ.60,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, வங்கிகளில் கடன் பெற்றுள்ள நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் போய்ச் சேர வேண்டுமேயன்றி பெருமளவு நிலத்தை வைத்துள்ள பண்ணையாளர்களுக்கு அல்ல என்று கூறியது.
தனியாரிடம் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கும் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், அரசை ஏமாற்றிப் பயன்பெறும் கடன் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற கொள்கைகள் வழிவகுத்துவிடும். இதை அனுமதிக்க முடியாது என்றது.
மேலும், மனுதாரர் தன்னிடம் விவசாயிகள் நலனுக்கேற்ற நல்ல திட்டங்களை வைத்திருந்தால் அதை தாராளமாக அரசிடம் ஆலோசனையாக வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் தாங்களாகவே வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி கேட்டதை அடுத்து, மனு நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக இந்தப் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, "மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டம் எல்லா விவசாயிகளுக்கும் சமமான பலனைத் தராது. தனியாரிடம் அதிகம் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில் இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.