தமிழருக்கு எதிராக செ‌ய‌ல்படு‌ம் கட்சிக்கு வாக்களிக்க கூடாது: பெங்களூரு தமிழ் அமைப்புகள் தீர்மானம்!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (09:21 IST)
''தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு வருகிற சட்ட‌ப்பேரவை தேர்தலில் வாக்களிக்கக் கூடாது'' என்று தமிழ் அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இந்த போராட்டம் வன்முறைக்கு திரும்பியது. பெங்களூரு தமிழ்ச்சங்கம், தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ் அமைப்புகள், தமிழ் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த பெங்களூர் தமிழ்ச்சங்கம் அழைப்பு விடுத்தது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று அல்சூர் ஏரிக்கரையில் உள்ள பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், தமிழர் பேரவை, தனி தமிழர் சேனை, ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தின் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

கன்னட அமைப்புகள் தங்களை திடீர் தலைவர்களாக காட்டிக்கொள்ள காவிரி நதி நீர் பிரச்சினை என்றும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்றும், ஏதாவது பிரச்சினைகளை கையில் எடுத்து கொண்டு சட்டம்-ஒழுங்கை குலைப்பதும், தமிழர்கள் எதிர்ப்பை வலுப்படுத்துவதும் வழக்கமாக இருந்தன. இதை தேசிய கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள், நடுநிலையாளர்களான அறிஞர்கள் யாருமே. கண்டிப்பது இல்லை. அத்துடன் காவல் துறையினர் கலவரம் செய்யும் கன்னட அமைப்பினருக்கு காவல் இருப்பது போல் நடந்து கொள்கின்றனர்.

பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும், தமிழ்நாடு அரசும், அதனை சார்ந்த தோழமை கட்சிகளும், தமிழ் நாட்டின் அத்தனை கட்சி தலைவர்கள் மற்றும் கலைஞர்களும் ஒன்று திரண்டு கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு துணை புரிந்தனர்.

தமிழ்நாடு சட்ட‌ப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளமைக்கும், தேவையானால் சாலையில் இறங்கி போராட முன்வந்த தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும், திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கும் பெங்களூர் தமிழ்ச்சங்கமும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் கர்நாடக தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றன. உலகனைத்தும் பரவியுள்ள அனைத்து தமிழர்களின் பாதங்களில் நன்றி மலர்களை தூவுகிறோம்.

தமிழர்களுக்கு எதிரான எந்த அமைப்புகளுக்கும், அதன் சார்பு நிலை கட்சிகளுக்கும் கர்நாடக தமிழர்கள் யாரும் வருகிற தேர்தலில் வாக்களிக்கக் கூடாது.

தமிழக முதல்வரின் அறிவிப்பை ஏற்று தமிழர்-கன்னடர் நல்லுறவை கருத்தில் கொண்டு, பெங்களூர் தமிழ்ச்சங்கம் முன்னின்று நடத்த இருந்த அறவழி போராட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்