மத்திய ஆசிய நாடுகளுடன் எரிசக்தி ஒப்பந்தம்: அன்சாரி அயல்நாடு பயணம்!
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (14:55 IST)
துர்க்மெனிஸ்தான், கசகஸ்தான் நாடுகளுடன் எரிசக்தி, வர்த்தக விரிவாக்கம், குழாய் எரிவாயு ஆகிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமித் அன்சாரி அந்நாடுகளுக்கு மேற்கொள்கிறார்.
இன்று முதல் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அன்சாரி, துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஸ்காபத்தில் அந்நாட்டு குடியரசுத் தலைவர் குர்பங்குலி பெர்டிமுகமேதோவ், துணைத் தலைவர் ரஷித் மேரேடோவ் உட்பட மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளார்.
அப்போது, துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (டி.ஏ.பி.ஐ.) குழாய் எரிவாயு திட்டத்தில் இந்தியாவின் பங்கு, ஹைட்ரோகார்பன் விவகாரங்களில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தொடர்ந்து, கசகஸ்தான் செல்ல உள்ள அன்சாரி அல்மேட்டி நகரில் குடியரசு தலைவர் நுர்சுல்தான் நஷார்பாயேவ், நாடாளுமன்ற தலைவர் கே டோகயேவ் ஆகியோரை சந்திக்கிறார். மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு திட்டங்களில் இருநாட்டு தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர்.
இந்திய-கசகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தும் அன்சாரி பேச்சு நடத்த உள்ளார்.
கடந்த அண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இதுதான் அவருக்கு முதல் அயல்நாட்டு சுற்றுப்பயணமாகும். அன்சாரியுடன் மத்திய அயலுறவு இணை அமைச்சர் அகமதுவும் உடன் செல்கிறார்.