மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்வு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:48 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பிரகாஷ் காரத் கோவையில் நடந்த அக்கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், 15 பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவும், 87 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மத்தியக் குழுவும் அமைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்தது. இறுதி நாளான இன்று கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்சியின் பொதுச் செயலராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த தலைவர்களான ஜோதி பாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் நீங்கிய 15 பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழு அமைக்கப்பட்டது.
கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் முகமது அமீன், மேற்குவங்க அமைச்சர் நிருபம் சென் ஆகியோர் புதிதாக அரசியல் தலைமைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிரகாஷ் காரத் தவிர கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், சீதாராம் யச்சூரி, சி.ஐ.டி.யு. தலைவர் எம்.கே.பாந்தே, பினராயி விஜயன், எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, பீமன் போஸ், கே.வரதராஜன், பி.வி.ராகவலு, பிருந்தா காரத் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாவர்.
மூத்த தலைவர் ஜோதி பாசு அரசியல் தலைமைக் குழு சிறப்பு அழைப்பாளராகவும், முன்னாள் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மத்தியக் குழுவிற்கான சிறப்பு ஆழைப்பாளராகவும் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும், 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்தில் இருந்து தொடர்ந்து 44 ஆண்டுகளாக கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அரசியல் தலைமைக் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆர்.உமாநாத் தொடர்ந்து மத்தியக் குழுவிலேயே நீடிக்கிறார்.
இதுதவிர கேரள நிதி அமைச்சர் தாம்ஸ் ஐசக், மேற்குவங்க அமைச்சர் கெளதம் தேவ் உள்ளிட்ட 87 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மத்தியக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் புதிய முகங்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.