பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: ரிசர்வ் வங்கி கவர்னர்!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:26 IST)
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

இந்த மாதம் 29ஆம் தேதி ரிசர்வ் வங்கி கடன் கொள்கையையும், காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையையும் வெளியிட உள்ளது. இதே மாதிரி அறிக்கைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் ஜனவரி மாதம் வெளியிட்டார். அப்போது அவர் அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது, “பணவீக்கம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. நாங்கள் இது குறித்து அதிக கவலை கொண்டுள்ளோம்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க முழு அளவில் ஆயத்தமாக இருக்கின்றோம். அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது சிறிது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். நிலைமை சிக்கலாக இருப்பதால், எந்த நடவடிக்கையும் மிக கவனமாக பரிசீலித்து, அதன் பிறகு எடுக்கப்படும” என்று ரெட்டி கூறினார்.

பணவீக்கம் 5 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்காது என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு இருந்தது. இதற்கு மாறாக பணவீக்கம் 6.68 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உணவுப்பொருட்கள்,பெட்ரோலிய கச்சா எண்ணெய், உலோகம் ஆகியவைகளின் விலை அதிக அளவில் உயர்ந்து இருப்பதே.

ஜனவரி மாதம் ரிச்ர்வ் வங்கி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட போது, வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. அத்துடன் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் குறைக்கவில்லை. இதற்கு காரணம் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் பணவீக்கம் அதிகரிக்கும் என அறிவித்தது.

தற்போது ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட, பணவீக்கம் அதிகரித்து விட்டது. இதனால் இம்மாத இறுதியில் ஆய்வறிக்கை, கடன் கொள்கை வெளியிடும் போது, வங்கிகளின் ரொக்க பண இருப்பு விகிதத்தையும், ரிபோ ரேட் எனப்படும் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என தெரிகிறது.

தற்போது வங்கிகளின் இருப்பு விகிதம் 7.5 விழுக்காடாகவும், ரிபோ வட்டி விகிதம் 7.75 விழுக்காடாகவும் இருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்