உரிமையை பறிக்காதீர்கள்- மாநில முதல்வர்கள்

சனி, 29 மார்ச் 2008 (14:26 IST)
தாது சுரங்க‌ங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமையை பறிக்காதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்பித்துள்ள மனுவில் ஐந்து மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் பூமிக்கு அடியில் நிலக்கரி, இரும்பு தாது, பாக்ஸைட் தாது, யூரேனியம் தாது போன்ற அரிய செல்வங்கள் உள்ளன. இதனை வெட்டி எடுப்பதற்கு மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன் மாநில அரசுகளுக்கு ராயல்டி எனப்படும் உரிமை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு புதிதாக தாதுவளம் பற்றிய கொள்கையை அறிவிக்க உள்ளது. இந்த புதிய கொள்கை, மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.

தாது சுரங்க‌ங்களை அமைக்க யாருக்கு உரிமை அளிப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் உள்ளது. இதை தடை இல்லாமல் தாது பொருட்கள் கிடைத்தல் அல்லது குறிப்பிட்ட காலம் வரை நிரந்தரமாக கிடைத்தல் என்ற பெயரில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமையை மத்திய அரசு பறிக்க‌க் கூடாது. இந்த புதிய கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பு, மாநில அரசுகள் எழுப்பியுள்ள பிரச்சனையை பற்றி, பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

மத்திய அரசின் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களை திருப்தி படுத்துவதற்காக எவ்வித கட்டுப்பாடும் இன்றி, தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் வகையில் உள்ளது. இதனால் சில பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் நாட்டில் ஏராளமாக உள்ள தாது வளங்கள் சிக்கிவிடும்.

இந்த புதிய கொள்கையில் பல பாதகமான அம்சங்கள் உள்ளன. இதை அமல்படுத்துவதற்கு முன்பு, மாநில அரசுகள் கூறியுள்ள கருத்துக்களை உயர்மட்ட குழுவை அமைத்து பரிசீலிக்க வேண்டும். இந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சைகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க‌ண்ட் முதல்வர் சார்பில், அந்த மாநில நீர் வளத்துறை அமைச்சர் கே.கே.சிங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்