காசி விஸ்வநாதர் கோயில், கியான்வாபி மசூதி ஆகிய புண்ணிய ஸ்தலங்களின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
"உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பதட்டத்திற்குரிய மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் காசி விஸ்வநாத் கோயில், கியான்வாபி மசூதி ஆகியவற்றை குறி வைத்துள்ளனர்" என்று காவல்துறை கூடுதல் தலைமை அதிகாரி பிரவின் குமார் கூறினார்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து, அந்த புண்ணிய ஸ்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
"வாரணாசி மண்டலத்திற்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் தீவிரவாத அமைப்புகள் தங்களது தொடர்பை விரிவுபடுத்தியுள்ளனர். அந்தப் பகுதிகளை கண்காணிக்கும் பணியில் புலனாய்வு துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறிய பிரவின் குமார், அந்த மாவட்டங்களின் பெயர்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க மறுவித்துவிட்டார்.