ஆக்ரா: குழிக்குள் விழுந்த சிறுமி போராடி மீட்பு!

வியாழன், 27 மார்ச் 2008 (10:52 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 46 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றுக்கான குழிக்குள் விழுந்த இரண்டரை வயது சிறுமி 27 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டாள்.

ஆக்ரா அருகே மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹலஸ்புரா கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட 180 அடி ஆழ்குழாய் கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. பயன்பாட்டில் இல்லாத அது சரியாக மூடப்படவில்லை.

இதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி வந்தனா நேற்று முன்தினம் தனது தந்தையுடன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது குழியில் தெரியாமல் காலை வைத்த வந்தனா, 46 அடி ஆழத்திற்குள் விழுந்து அலற ஆரம்பித்தாள்.

ஊர்க்காரர்களிடம் இந்த விபத்து தெரிவிக்கப்பட்ட நிலையிலும், அவர்களால் எதுவும் செய்யமுடியாததால், தீயணைப்புப் படையினரும், பின்னர் ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் சிறுமி சிக்கிக் கொண்டிருந்த குழிக்கு அருகில் 5 அடி தூரத்தில், வேறு குழியைத் தோண்டி, அதில் இருந்து குகை அமைத்து சிறுமி வந்தனாவை ராணுவத்தினர் மீட்டனர்.

சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் மூலம் ஆக்ஸிஜனும், கயிறு மூலம் பழங்களும் அனுப்பப்பட்டன.

மேலும், வந்தனா பேசுவதை தெளிவாக கேட்பதற்காகவும் அவள் சிக்கியிருக்கும் இடத்தை ராணுவத்தினர் துல்லியமாக அறிந்து மீட்பதற்கு வசதியாக ஒரு செல்போனையும் குழாய் வழியாக அனுப்பி வைத்தனர்.

சுமார் 27 மணி நேர போராட்டத்திற்குப் பின் வந்தனா உயிருடன் மீட்கப்பட்டாள்.

வெப்துனியாவைப் படிக்கவும்