கோத்ரா: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
செவ்வாய், 25 மார்ச் 2008 (16:03 IST)
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த மதக் கலவரங்கள் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் குழுவினர் தங்கள் அறிக்கையினை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 5 பேர் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் குஜராத்தைச் சேர்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, அபிஷ் பாட்டியா ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ஓய்வுபெற்ற ம.பு.க. இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னால் டி.ஜி.பி. சி.பி. சத்பதி ஆகியோரும் உள்ளனர்.
இந்தக் குழுவினை அமைப்பதற்கான முறையான உத்தரவுகள் புதன்கிழமை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அர்ஜித் பசாயத், பி.சதாசிவம், அஃதாப் ஆலம் ஆகியோர் அடங்கிய 3 பேர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
குஜராத் கோத்ரா கலவர வழக்கில் பெரும்பலான சாட்சிகள் மிரட்டல்களாலும், அச்சுறுத்தல்களாலும் தடம்புரண்டு விட்டதால் இவ்வழக்கை ம.பு.க. போன்ற தன்னிச்சையான அமைப்பு மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
கோத்ரா கலவர வழக்குகளை குஜராத்திற்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் கோரியுள்ளது.
இவ்வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, குஜராத் அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்டாகி ஆகியோரின் வாதங்களை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றம் கேட்டது.